Saturday, 11 February 2017

Big Data (பெரிய தரவு) பற்றி தெரிந்து கொள்வோம்

இன்டர்நெட் வேகமாக பரவியிருக்கும் இந்த காலகட்டத்தில் டேட்டா என்ற சொல் சூப்பர் ஸ்டார் அளவிற்கு பிரபலமடைந்துள்ளது. இந்த டேட்டா என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். இன்டெர்நெட்டில் நாம் ஷாப்பிங் செய்யும்போது தேர்ந்துஎடுக்கும் பொருள்களின் விவரங்கள் டேட்டாவாக வர்த்தக நிறுவனங்களின் தகவல் மையத்தில் (database) சேமிக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஒரேயொரு பரிவர்த்தனையை(transaction) பார்க்கும்போது இந்த டேட்டாவின் அளவு மிகவும் குறைந்ததே (ஒரு சில kb மட்டுமே). ஆனால், இதுபோல் உலகில் உள்ள பல கோடி பேர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது, சேகரிக்கும் டேட்டாவின் அளவு அபரிதமாகிறது. சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல் கோடிக்கணக்கான டேட்டா  ஒன்றுகூடி பெருவெள்ளம் அல்ல; பெருங்கடலென உருவெடுத்து  Big Data- வாகிறது. இது பெரிய தரவு என்று தமிழில் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சில முக்கியமான இணையத்தளத்தில் எவ்வளவு டேட்டா உருவாகிறது என்று பார்ப்போம்.

Twitter - சுமார் 50 கோடி டீவீட்ஸ்.
Youtube - 40 லட்சம் மணிநேர வீடியோ (இது சுமார் 16 லட்சம் படத்திற்கு சமம்)
Facebook - 430 கோடி போஸ்ட், 575 கோடி லைக்ஸ்.
Google search - 600 கோடி

இந்த டேட்டா பெருங்கடலை வைத்துக்கொண்டு என்ன செய்வது? புராண காலத்தில் பாற்கடலை தேவர்கள் மேரு மலையை மத்தாக கொண்டு கடைந்து அமுதம் பெற்றனர். அதுபோல், இன்றைய தொழில் நிறுவனங்கள் இந்த டேட்டா பெருங்கடலை BIG DATA ANALYTICS என்ற நவீன தொழில்நுட்பத்தை மத்தாக கடைந்து அமுதம் பெறுகின்றனர். அமுதம் என்பது இங்கு குறிக்கிறது என்று பார்ப்போம்.

வாடிக்கையாளர் ஈடுபாடு (Customer Engagement) - பல்வேறு வாடிக்கையாளர்கள் வாங்கும் வழிமுறைகளையும் விருப்பங்களையும் தீர ஆராய்ந்து, விருப்பத்திற்கு ஏற்றாற்போல் சிபாரிசு செய்யப்படுகிறது. உதாரணமாக, அமேசான் இணையத்தளத்தில் பொருளை தேடும்போது நம் குறிப்பறிந்து நமக்கு ஏற்ற பொருள் வகைகளை சிபாரிசு செய்யும். அதுமட்டுமில்லாமல், ஒரு பொருளை வாங்கியபின் அதனோடு தொடர்புடைய மற்ற பொருள்களும் காண்பிக்கப்படுகிறது. இதில் தோன்றுவது பெரும்பாலும் சரியாக இருப்பது மிகவும் ஆச்சர்யம் தான்! இதனால் ஓவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை (Personalisation) பெறமுடிகிறது; நிறுவனத்தின் லாபமும் உயருகிறது.
Source - Amazon India


வாடிக்கையாளர் உணர்வு ஆய்வு (Sentiment Analysis) - இன்று facebook, twitter, google plus, whatsapp போன்ற சமூக ஊடகங்களை பார்த்தால் அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பிடிக்காதவற்றை  வசை பாடுவதும், பிடித்தவற்றை புகழாரம் பாடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, இதுபோன்ற சமூக ஊடகங்களை ஆராய்ந்து சமூகத்தின் விருப்பத்திற்கேற்ப தங்களுடைய பொருள்கள் அல்லது சேவை தரத்தை உயர்த்திக்கொள்ள நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு அமைகிறது.
Source - skyttle.com


மோசடி தடுப்பு (Fraud Detection) - இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் வழக்கமாக நடுக்கும் பரிவர்த்தனைகளிலிருந்து மாறாக தோன்றும் பரிவர்த்தனைகளை கோடிட்டு காண்பித்து, மோசடி நடப்பதை குறைக்க உதவுகிறது.

வியாபார செலவு குறைப்பு (Cost reduction). - மேற்கூறிய நன்மைகளால் ஒட்டுமொத்த வியாபாரத்திற்கான செலவு மிச்சமாகிறது.

Big Data தொழில்நுட்பங்கள்

1. Prescriptive Analytics - ஒரு குறிப்பிட்ட டேட்டா சூழ்நிலையில் என்ன நடக்கலாம் என்பதை அறிவது

2. NoSQL databases - பொதுவாக RDBMS என்னும் database தொழில்நுட்பத்திற்க்கு பதிலாக NOSQL database அதிக அளவு டேட்டாவை கையாள உதவும்.

3. Stream analytics - நேரிடையான ஆய்வுக்கு பயன்படும் தொழில்நுட்பம்

4. In-memory data fabric - பெருமளவு டேட்டாவை மெமரியில் வைத்து கையாள உதவும்.

5. Distributed file store - ஒரே இடத்தில டேட்டாவை  சேமிக்காமல் பல இடத்தில பிரித்து கையாளுவது.

6. Data Virtualization and Integration - பல்வேறு source டேட்டாவை இணைத்து மெய்நிகராக (virtualization) செய்ய உதவுகிறது

7. Data preparation and Quality

இதுபோன்ற பயன்களால் BigData பற்றி அறிந்த IT பொறியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மேலும் வளர்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்!


Sunday, 22 January 2017

3D Printing என்றால் என்ன ?

கடந்த சில நூற்றாண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நம்மிடையே மாற்றங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதில், சில தொழில்நுட்பம் அதிரதடியாக புயலை போன்று புரட்டி போடும் மாறுதலை உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக smartphone வந்த பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம் - மியூசிக் பிளேயர், பேஜர், அலாரம் கிளாக், ஜிபிஸ் சிஸ்டம் இவை இருக்கும் இடம் தெரியாமல் போனது. நவீன கேமராவிற்கு ஈடாக செல்போன் கேமரா செயல்படுவதால் கேமரா விற்பனையும் குறைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், பல apps (செயலிகள்)  ஏனைய மென்பொருளுக்கும் போட்டியாக உள்ளது. இவ்வகையான மாற்றத்தை disruptive transformation என்று வல்லுநர்கள் அழைப்பார்கள். இந்த வகையிலே ஒன்று தான் (முப்பரிமாண அச்சிடல்)3D Printing என்னும் தொழில்நுட்பம்.

3D Printing என்றால் என்ன ? - ஒரு சிற்பி சிலையை செய்யும் போது, முதலில் ஒரு பெரிய பாறாங்கல்லில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லாத கற்பொருளை நீக்கியபின் தான் விரும்பிய சிலையை முடிப்பார். அதேபோல், தொழிற்சாலையிலும் ஒரு பெரிய உலோக படிவத்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு அதிகப்படியாக உள்ள உலோகத்தை அகற்றி தேவையான பொருளை தயாரிப்பர். 3D Printing - மேற்கூறிய முறைக்கு நேர் எதிரானது. 3D Printing முறையில் அடிப்படை பொருளை (பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கலந்த) துகள் வடிவத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கு அடுக்காக  டெபாசிட் செய்து வரையறுக்கப்பட்ட உருவத்தை அடைகிறோம். இப்படியாக, பலவிதமான நுணுக்கமான அரிதான பொருட்களை தயார் செய்யமுடியும்.
IMG Source: mygadgets.my

இந்த 3D Printing துணைகொண்டு வீடு முதல் இயந்திரங்களின் உதிரி பாககங்கள் வரை தயாரிக்கலாம். விமானம் தயாரிப்பின் முன்னோடியான ஜெனரல் எலக்ட்ரிக், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்கள் விமான என்ஜினுக்கு தேவையான 20,000 பார்ட்ஸ் வரை 3D Printing மூலம் தயார் செய்துகொள்கிறது. அமெரிக்காவில், இன்று ஹெரிங் எயிட் முழுவதும் 3D Printing செய்யப்படுகிறது. சீனாவில் உள்ள Winsun Decoration Design Engineering என்னும் கம்பெனி Suzhou என்ற இடத்தில 3D Printing மூலம் ஒரு சிங்கள் storey வீட்டை வெறும் 24 மணி நேரத்தில் கட்டி மாஜிக் செய்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தினால் மனித உறுப்புகளையும் பிரிண்ட் முடியும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இருதயம், ஈரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தயாரிப்பதில் தொடர்ந்து ஆய்வு  நடந்து வருகிறது. இது பூரண வெற்றி அடைந்தால் பலருக்கு உயிர் காக்கும் வரமாக அமையும்.
3D Organ printer - Img Credit http://www.techtimes.com/articles


இருப்பினும் All is well என்று சொல்லமுடியாது. வேறு எந்த தொழில்நுட்பம் போலவே இதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. எந்த ஒரு பொருளையும் அச்சிட இயலும் என்பதால் மற்றவர் படைப்பை எளிதாக காப்பி அடித்து copyright violation அதிகரிக்கும். தீயசக்திகளின் கைக்கு கிடைத்தால் ஆயுதம்செய்ய தேவையான பொருட்களை அவரே தயாரித்துகொள்வர்.

தொழில்நுட்பத்தில் உள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளை பெருக்கிக்கொள்வதே புத்திசாலித்தனம்! 

Saturday, 14 January 2017

நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை அளவிடுவது எப்படி?


சில நேரங்களில் நாம் பல காலம் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் உள்ள இடத்துக்கு எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்குக்கும்போது விடை தெரியாமல் திகைப்பது உண்டு. கூகுளை கொண்டு வெகு எளிதில் ஒரு இடத்தின் தூரத்தை இப்போது தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், விண்வெளியில் தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை எவ்வாறு அறிவது? இந்த கேள்வியை கேட்கும்போதே உங்கள் மனதில் இது ஒரு கடினமான தொழில்நுட்பம் வாயிலாகவே சாத்தியம் என்று யூகித்துஇருப்பீர். ஆனால், உண்மையில் இது ஒரு சாதாரண விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் கண்டுஅறியப்படுகிறது என்று தெரிந்தால் ஆச்சர்யம் கொள்வீர்.

பூமியில் தூரத்தை கிலோமீட்டர் அல்லது மைல் அளவில் தெரிந்துகொள்கிறோம். மிகுந்த தூரம் காரணமாக இந்த அளவு கொண்டு நட்சத்திரம் மற்றும் கோள்களின் தூரத்தை அறிவது கடினம். எனவே, ஒளி ஆண்டு என்ற அளவு பயன்படுகிறது. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் வரை செல்லும். இந்த  அசுரவேகத்தில் ஒளி ஒரு ஆண்டு காலம் எவ்வளவு தூரம் செல்லுமோ  அதுவே ஒளி ஆண்டு என்று அளவிடப்படுகிறது. எனவே, விஞ்ஞானிகள் நட்சத்திர தூரத்தை 4 ஒளி ஆண்டு அல்லது 50 ஒளி ஆண்டு என்றே குறிப்பிடுகின்றனர். இந்த ஒளி ஆண்டை அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

நாம்  இரண்டு கண்கள் கொண்டு ஒரு பொருளை பார்க்கும்போது நமது மூளை  கண்களிலிருந்து வரும் தகவலை கொண்டு   அந்த பொருள் இருக்கும் நிலையை அறிகிறது. இப்போது, நாம் ஒரு கண்ணை மூடியவாறு அதே பொருளை பார்த்தால் அது தன்னுடைய இடத்திலிருந்து சற்றே தள்ளி இருப்பதாய் தோன்றும். அதே போல், மற்றொரு கண்ணை மூடி கொண்டு பார்த்தால் எதிர்புறம் சற்றே தள்ளி இருப்பதாய் தோன்றும். இதன் பெயர் இடமாறு எனப்படும். ஆங்கிலத்தில் இது Parallax எனப்படும். இந்த இடமாறு தொழில்நுட்பத்தை (Parallax Technique) கொண்டே ஒளி ஆண்டுகள் கணிக்கப்படுகிறது.

பூமி சூரியனை சற்றே நீள்வட்ட பாதையில் சுற்றி வருவது நாம் அறிந்ததே. இந்த சுற்று பாதையின் விட்டம் சுமார் 30 கோடி கிலோமீட்டர். சூரியன் தனது சுற்று பாதையில் ஒரு இடத்தில் இருப்பதாக கருதுவோம். இந்த நிலையில் தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரத்தை டெலெஸ்கோப் மூலம் பூமிக்கும் அதற்கும் உள்ள கோணத்தை குறித்துக்கொள்வர். ஆறு மாதம் கழித்து பூமி தனது சுற்று பாதையில் நேரெதிர் வரும்போது மீண்டும் கோணத்தை குறித்துக்கொள்வர். இரண்டு அளவுக்கும் உள்ள வித்தியாசம் மொத்த கோணத்தை கொடுக்கும். அதில் சரி பாதி அளவு எடுத்து 'p' என்ற கோண அளவு கிடைக்கும். இது தெரிந்தால் போதும், நட்சத்திர தூரத்தை  d = 1/p என்ற சூத்திரம் மூலம் கண்டுபிடுத்துவிடலாம். மேற்குறிய  முறை பெரும்பாலும் பயன்படுகிறது என்றாலும் 400 ஒளி ஆண்டுகள் மேல் தூரத்தை இம்முறை கொண்டு அளக்கமுடியாது. அதற்கு மேல் சென்றால் நட்சத்திரங்களின் ஒளி அளவை கொண்டு தூரம் கண்டறியப்படுகிறது.